March 10, 2023 தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பாதிப்பு இருந்து வருகிறது. இதையடுத்து, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கண்டறிய சிறப்பு பொது மருத்துவ முகாம் கோவை மாநகராட்சியில் நடத்தப்பட்டது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் 35 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ கோவை மாநகராட்சியில் 35 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 3390 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 92 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி கண்டறியப்பட்டது. 30 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 10 பேரை காய்ச்சல் தொடர்பாக அரசு மருத்துவமனை அல்லது அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்,’’ என்றார்.