March 15, 2023 தண்டோரா குழு
கோவை ரயில் நிலையம் அருகே ரேபிட்டோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட கல்லூரி மாணவர்கள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக்கல்லூயில் இறுதியாண்டு படித்து வருகிறார். மேலும் தற்போது வருவாய்க்காக பகுதிநேரமாக ரேபிட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கோவை ரயில் நிலையம் அருகே வாடிக்கையாளர் ஒருவரை அழைக்க வந்த போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ராஜாவிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் ராஜாவை சூழ்ந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து சட்டக் கல்லூரி மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர்,கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணனிடம் மனு அளித்தனர். விசாரித்த ஆணையர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.