March 16, 2023 தண்டோரா குழு
உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் செல்வபுரம் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் செல்வபுரம் காவல் நிலைய காவல்துறையினர், சேரன் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் செல்வராணி,முதல்வர் கார்த்திக் வீரபத்திரன்,பிடியாட்ரிக் துறைத் தலைவர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செல்வபுரம் சிக்னல் சந்திப்பில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு வாசகம் எழுதிய பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் வாசகம் எழுதிய பதாகைகளைக் காட்டி அதை படிக்க செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பேசுகையில்,
”இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வேக கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, செல்வபுரம் காவல்துறையுடன் இணைந்து நடத்துகின்றோம்” என்றார்.
மேலும், பிடியாட்ரிக் துறைத் தலைவர் அருணா பேசுகையில், ”இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக செல்கின்றனர்.
அதனால், எங்கள் சேரன் பிசியோதெரபி கல்லூரி மாணவர்களை கொண்டே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகின்றோம்”என்றார்.