March 16, 2023 தண்டோரா குழு
கோவை தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருந்த கழிவு நீரை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அகற்றிய துப்புரவு பணியாளர்கள்.
கோவை தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தொட்டி நிறைந்து கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் குளம் போல் தேங்கி நின்றது.இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதனை அடுத்து மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அந்த கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அப்பணியாளர்கள் கையுறை காலுறை முககவசங்கள் போன்ற எந்த ஒரு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவு நீரை அகற்றினர்.இந்நிலையில் அங்கு வந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீரை அகற்றுவதை கண்டு உடனடியாக அவர்களை இப்பணிகளை நிறுத்தும்படியும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு பணிபுரியுமாறும் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு கழிவு நீரை அகற்றினர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இதுபோன்று அடிக்கடி கழிவுநீர் தொட்டி நிரம்பி கழிவுநீர் வெளியேறுவதாகவும், குறிப்பாக மழைக்காலங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அங்கு வரும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனவே மருத்துவமனை நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.