March 16, 2023 தண்டோரா குழு
ஹோலி பண்டிக்கை மற்றும் வதந்தி காரணமாக கோவை மாவட்டத்தில் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பாததால் தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தற்போது உள்ள தொழிலாளர்கள் விடுமுறையின்றி வேலை பார்க்கும் நிலையும் உள்ளது.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு தொழில்களில் 5 லட்சம் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்,அதன் காரணமாக கோவையில் இருந்து அவர்கள் வெளியேறி வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு கோவை ரயில் நிலையங்களில் குவிந்தனர். வதந்தி ஒரு புறம் இருக்க ஹோலி பண்டிகை கொண்டாடவும் ஊர்களுக்கு செல்ல குவிந்தனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.இதனால் தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு,குறு தொழில்கள் சங்க துணைத்தலைவர் சுருளி வேல் கூறுகையில், “
கோவையில் உள்ள பவுண்டரிகள், சிறு,குறு தொழில் நிறுவனங்கள், பஞ்சாலைகள், பெரிய நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கும் மற்றும் வதந்திகளை நம்பியும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். மார்ச் மாதம் இயர் எண்டிங் என்பதால் ஏற்கனவே பெற்றிந்த ஜாப் ஆர்டர்களை குறித்த நேரத்திற்குள் உற்பத்தி செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாட வழக்கமாக குறைந்த அளவே வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
ஆனால் தற்போது கூடுதலாக 25 சதவீதம் வெளியேறியுள்ளனர். அவர்கள் 10 அல்லது 15 நாட்களில் திரும்பி வந்துவிடுவார்கள். தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் திரும்பி வர மேலும் நாட்கள் ஆகும் என தெரிகிறது.
இதனால் தற்போது பணியில் இருக்கும் தொழிலாளர்களும் விடுமுறை எடுக்காமல் பணிகளுக்கு வரும் நிலை உள்ளது,” என்றார்.