March 17, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் போலீஸாரால் 735 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு போலீஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இது தொடர்பாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் சூலூர் ரயில்வே பீடர் ரோட்டிற்கு விரைந்து சென்று குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மதன்ராஜ் (26), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாதரம்(31), அரசூர் பகுதியை சேர்ந்த சிவசாமி (48)* மற்றும் சூலூர் பகுதியை ராஜா (52) ஆகிய நபர்களை கைது செய்து 735 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக அவர்கள் தப்ப முயன்ற போது போலீஸார் அவர்களை அனைத்து பக்கமும் சுற்று வளைத்து துரத்தி பிடித்தனர்.