March 17, 2023
தண்டோரா குழு
கோவை மாநகர போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகரில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள், அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பொறுப்பற்ற வகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொண்டு வீடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.
மேற்படி ஆயுதங்களை காட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை காண்பித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து,அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
யாராவது தேவையற்ற வகையில் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, சுய விளம்பரத்திற்காகவோ அல்லது போட்டிக்காகவோ கைகளில் ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.