January 13, 2017 தண்டோரா குழு
நாடு முழுவதும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு உரிய சூழலைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தித் தரவேண்டும் என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் சென்ற ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது நடந்த பிரசாரத்தில் முதலமைச்சர் நிதீஷ்குமார், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று கூறினார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை அமல்படுத்தினார்.
இதற்கு, பிரதமர் மோடியும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதனிடையே நாடு முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த நிதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, பிகார் மாநிலதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வியாழக்கிழமை அவர் பேசுகையில், ”பிகாரில் முழு மதுவிலக்கை அமல்படுத்தியதற்காகப் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. குஜராத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது மோடி அவர்கள் முழு மதுவிலக்கை அமல்படுத்தினர். அது 12 ஆண்டுகளாக அமலில் உள்ளது.
அதே போல் நாடு முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதற்குரிய சூழலைப் பிரதமர் மோடி ஏற்படுத்தித் தரவேண்டும். அதன் முதல் கட்டமாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முழு மதுவிலக்கை அமல்படுத்துமாறு அவர் உத்தரவிட வேண்டும்“ என்றார்.