March 20, 2023 தண்டோரா குழு
தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில்வே சேவை என்கிற அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு கோவை மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகையை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளபடியே இது யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கு பெரும் உதவி புரியும். இது பெண்களுக்கான உரிமைத்தொகையாகவே இருக்கும்.
இதேபோன்று கோவை மாநகரம் என்றாலே போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்றாகிப்போனது. இதனை கருத்தில் கொண்டு 2009ல் நான் கோவை நாடாளு மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காலத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையின் அவிசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதன்தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிபுணர் ஸ்ரீதரனை கோவை மாவட்டத்திற்கு வரவழைத்து மெட்ரோ ரயில் சாத்தியங்கள் குறித்து ஆய்வு மேற் கொள்ள வைத்தோம். கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அன்றே உறுதிப்படுத்தினோம். ஆனால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடந்த அதிமுக அரசு இதனை கிடப்பில் போட்டது. தற்போது தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில், கோவையில் 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். அவிநாசி சாலை – சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவை மாநகர மக்களின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று, மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ. 30,000 கோடி கடன் வழங்க இலக்கு, மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதி திராவிட மாணவர்களுக்காக 100 கோடியில் விடுதிகள், கோவையில் 172 கோடி ரூபாய் மதிபீட்டில் செம்மொழி பூங்கா, கோவையில் புதிய சிப்காட் பூங்காக்கள், கோவை மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவை உள்ளிட்ட அறிவிப்புகள் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது.
கோவை மாவட்டம் திமுக கூட்டணிக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்களைக்கூட தரவில்லை ஆகவே கோவை புறக்கணிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கூறியபோது, என்னுடைய ஆட்சி “வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும் ஆட்சியாக இருக்கும்” என்று சொன்னதை தமிழக முதல்வர் சொன்னதை செயல்பாட்டில் மூலம் நிருபித்துள்ளதாகவே கருதுகிறேன். தமிழகம் பயன்பெரும் அறிவிப்புகளும், கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று, பள்ளிகள், கல்லூரிகள் நிறைந்த கல்வி மாவட்டமாக உள்ள கோவையை மையப்படுத்தி, அறிவியல் தேவையாக இருக்கிற கோளரங்கம் அமைக்கப்பட வேண்டும். இது மாணவர்களுக்கான கல்வி ஆய்வு கூடமாக அமைய உதவி புரியும். இதனையும் தமிழக முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.