April 4, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் நீலாம்பூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆட்டோவில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (36) மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (40) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து ரூ.40,000 மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா, ரூ.18,200- பணம், ஆட்டோ -மற்றும் இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் கூறியாதவது: ஆட்டோ ஒட்டுவது முழு நேர தொழில். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது பகுதி நேர தொழில். ஆட்டோவில் போதுமான வருமானம் இல்லை. நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை நன்றாக இருக்கும். பிற கஞ்சா விற்பனையாளர்கள் போலீசார் கெடுபிடியால் இப்பகுதியில் அதிகம் விற்பனை செய்ய வரமாட்டார்கள். ஆட்டோ ஓட்டுனராக வரும் போது எங்கள் மீது சந்தேகம் வராது என இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.