April 10, 2023 தண்டோரா குழு
கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும் சூழலில் கொரோனாவினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் 183 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ ரீதியாக கொரோனாவை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான ஒத்திகை நிகழ்வு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்று முன்னேற்பாடு மற்றும் கையாளுதல் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டார். இந்த ஒத்திகையில் ஆர்.டி.பி.சி.ஆர் மாதிரி, ஆக்ஸிஜன் பரிசோதனை,டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் காய்ச்சல் பரிசோதனை ஆகியவை நடைபெற்றது.இந்த ஒத்திகையில் 15 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில்,
” கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தொற்றில் இருந்து நோயாளிகளை எவ்வாறு காப்பது உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சி கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றதை பார்வையிட்டேன். இதுபோன்ற ஒத்திகை நிகழ்வை அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடத்த திட்டமிட்டு இன்று நடைபெற்றது.
தனியார் மருத்துவமனையில் 13 பேர் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நோய் தொற்று அறிகுறி என்பது கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 113ஆக உள்ளது.உள்கட்டமைப்பு மருத்துவமனைகளில் நன்றாக உள்ளது ஆக்ஸிஜன் வசதி உள்ளது. தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைக்கு செல்பவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.
பூஸ்டர் டோஸ் அடிஷனலாக உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி போட்டு இருந்தாலே போதும் பயப்பட தேவையில்லை.இன்னும் முக கவசம் கட்டாயப்படுத்தவில்லை அறிவுரை மட்டுமே.இணை நோய் இருந்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளி பின்பற்ற வேண்டும்.
ரேண்டமாகவும் சிம்டம்ஸ் அடிப்படையில் கோவிட் பரிசோதனை நடைபெறுகிறது.கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ளது. இதனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பது வராது,” என்றார்.