April 11, 2023 தண்டோரா குழு
தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்திய நில அளவை துறையின் பிதாமகன் என அழைக்கப்படும் வில்லியம் லாம்டன் கடந்த 10.04.1802-ம் ஆண்டு சென்னை புனித தோமையர் மலையில் நில அளவை பணிகளை தொடங்கினார்.அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி தேசிய நில அளவை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நில அளவைகள் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இதில் பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நில அளவை கருவிகள், வரைபடங்களை பெரிதாகவும், சிறிதாகவும் காண்பிக்கக்கூடிய பெண்டாகிராம் கருவி, பரப்பளவை அளக்கும் கம்ப்யூட்டிங் ஸ்கேல் கருவிகள், இணை கோடுகளை சரியாக வரைவதற்கு பயன்படும் பேரலால் ரூர்ல்ஸ் கருவிகள் உள்பட பல்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.