April 11, 2023 தண்டோரா குழு
ஜிஎஸ்டி அதிகாரிகள் கிடுக்குப்பிடி, பொருளாதார மந்த நிலை, மூலப்பொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு,குறுந் தொழில்நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. பல்வேறு சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் இதனால் இளநீர் வியாபாரம், டீ போண்டா, வடை விற்பனை போன்ற தொழில்களுக்கு மாறி வருவதாக தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன.
கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் சிறு குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர்.
ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த தொழில்நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி இருந்தன. அதற்கு பின்பு மெல்ல மெல்ல எழ துவங்கின ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, ஜிஎஸ்டி அதிகாரிகள் கிடுக்குப்பிடி, வங்கி கடன் கெடுபிடி, உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தையில் மந்த நிலை, போதுமான ஆர்டர்கள் கிடைக்காதது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:
கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், தயாரிக்கும் நிறுவனங்கள் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக கோவை உள்ளது. சுமார் 70 ஆண்டு கால பாரம்பரியமும் கோவையில் உள்ள பம்புசெட் நிறுவனங்களுக்கு உள்ளது. உலக அளவில் கோவை பம்பு செட்கள் பெயர் பெற்றுள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் பெரிய நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் உள்ளன. இதில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். கொரோனா பாதிப்பை காட்டிலும் மூலப்பொருள் விலை ஏற்றம், அதிகாரிகள் கெடுபிடிகள் போன்றவற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லையால் வங்கிகளுக்கு பயப்பட வேண்டிய நிலை, ஜிஎஸ்டி அபராதம் என தற்போது தொழில் முனைவோர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வழக்கமாக கோடை காலங்களில் பம்புசெட் விற்பனை என்பது தினமும் 25 ஆயிரம் வரை இருந்தது. ஆனால் தற்போது 5 ஆயிரமாக குறைந்துள்ளது. பம்புசெட் சிறு நிறுவனங்களை பொறுத்தவரையில் 40 சதவீதம் பேர் தொழில்நிறுவனங்களை மூடம் நிலையில் உள்ளனர். பல சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் இளநீர் வியாபாரம், டீ போண்டா, வடை விற்பனை, வாடகை ஆட்டோ ஒட்டுநர் போன்ற தொழில்களுக்கு மாறி விட்டனர். இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் குறுந்தொழில் முனைவோர்கள் 90 சதவீதம் பேர் தொழிலை மூடி இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே ஜிஎஸ்டி பில்லில் உள்ள சிறு, சிறு குறைகளுக்கு கூட லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதால் தொழில் முனைவோர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து தொழில் துறையினர் ஒன்றிய அரசிடம் எடுத்துக் கூறியும் எவ்விதமான நடவடிக்கை இல்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இப்பொழுது புதிய பிரச்சினையாக தமிழகத்தை சார்ந்த அதிகாரிகள் ஜிஎஸ்டி பில்லில் உள்ள சிறு, சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சங்கள் அபராத விதிப்பதும் தொழில் துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அருகாமையில் இருக்கக் கூடிய எடை மெஷின் வெயிட் பார்த்து பில் போடுவதாக சென்றால் கூட இவே பில் போடவில்லை என்று சொல்லி அபராத விதிப்பதும், பில்லில் ஏற்படுகின்ற சின்ன சின்ன எழுத்து பிழைக்கும் கூட அபராத விதிப்பதும், கம்பெனி பகுதியில் அதிகாரிகள் வட்டம் இடுவதும் வாகனங்களை மறித்து அபராதம் விதிப்பு என்று தொடர்ந்து தொழில்களை முடக்கி வருகின்றார்கள்.
தமிழகத்தில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை திட்டமிட்டு குறு, சிறு தொழில்களை முறையாக தொழில் செய்து வருகின்ற உற்பத்தி துறை முடக்குவதற்காக நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் எண்ணற்ற வடமாநில பொருள்கள் பில் இல்லாமல் விற்பனை செய்வதும், கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி பில் போடாமல் விற்பனை செய்வதும் நடக்கின்றது. அதையெல்லாம் பிடிப்பதற்கு தவறி விட்டு முறையாக தொழில் செய்து கொண்டிருக்கின்ற உற்பத்தி துறைக்கு நெருக்கடி கொடுப்பது என்பது கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறு,குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக அரசு முயற்சி
தமிழகத்தில் எம்.எஸ்.எம்.இ. துறையில் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு பேம் டி.என் அதாவது எம்.எஸ்.எம்.இ. வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் அரசால் நிறுவப்பட்டது. வெளிநாட்டு சந்தையில் எம்.எஸ்.எம்.இ-களின் தயாரிப்புகளுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிதல், அரசாங்க அனுமதி செயல்முறைகளை எளிதாக்குதல், தொழில்நுட்பம், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உள்ள இடையூறுகளுக்கு புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குதல், வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்கு ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் எம்.எஸ்.எம்.இ-களை இந்த அமைப்பு ஆதரிக்கிறது. சென்னையில் உள்ள கிண்டியில் உள்ள சிட்கோ கார்ப்பரேட் அலுவலக கட்டிடத்தை இந்த பணியகம் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த பேம் டி.என். பணியகத்துடன் பல்வேறு தொழில் அமைப்புகளும் இணைந்து கொண்டு தங்களிடம் உள்ள தொழில்முனைவோர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஜூபிலண்ட் கோவை தலைவர் அபுதாஹிர் கூறுகையில்,
‘‘தமிழக அரசு சிறு, குறுந் தொழில்முனைவோர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, தொழில்களை மேம்படுத்த பல்வேறு சிறப்பு பயிற்சிகளை பேம் டி.என். மூலம் கொடுத்து வருகிறது. இதில் சிறு, குறுந் தொழில்முனைவோர்கள் தங்களது பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அதற்கான சான்றிதழ்களை எவ்வாறு பெருவது என பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றனர். இதன் மூலம் தொழில் வர்த்தகங்கள் அதிகரிக்கம் வழி செய்ய உள்ளோம். சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் என கொங்கு மண்டல சிறு,குறுந் தொழில்முனைவோர்கள் பயன்பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றார்.