April 19, 2023 தண்டோரா குழு
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில், வணிகவியல் துறையின் சார்பில் நேற்று இளைஞர்கள் மாதிரி நாடாளுமன்றம் நிகழ்வு நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தின் செயல்பாடுகள்,விவாதங்கள் குறித்தும், நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்த மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி., விளக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில்,
“நமது நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகம் மாண்புகளை பாதுகாக்கும் ஒரே அவை நாடாளுமன்றமாகும். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் வலியுறுத்தி வருறோம்.இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை.மாறாக,மாநில அரசுகள் உள்ளாட்சிகளில் அந்த இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுகிறது, அது ஒருவகையில் வரவேற்கதக்கது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சிறப்பு சட்டங்கள் ஏதேனும் மக்கள் நலன் குறித்த மாறுபட்ட கருத்துக்களை மற்றும் நலன் விரோத நடவடிக்கைகளில் இருக்குமாயின் அதில் தலையிட்டு கேள்வி எழுப்புகிற உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. ஒரு அரசு அமைப்பதற்கு தனி பெரும்பான்மையோ அல்லது கூட்டாட்சி முறையிலான சில கட்சிகளினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு நாடாளுமன்றம் ஆட்சி அமைக்கப்படும். அந்த வகையில், கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில், 64 உறுப்பினர்களை கொண்டு இடதுசாரி கட்சிகள் வலுவோடு இருந்தது.
அப்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவோடு ஐக்கிய முன்னணி அரசு அமைக்கப்பட்டது. டாக்டர் மன்மோகன் சிங் பிரதமாராக இருந்தார். அந்த ஆட்சி காலத்தில் மக்களுக்கு தேவையான மகத்தான சட்டங்களை நிறைவேற்றினோம். அதிலும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்பந்தத்தின் காரணமாகவே இரண்டு முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி வேலை உறுதி சட்டம், இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வாழுகின்ற ஏழை மக்களினுடைய வறுமையை போக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
அதேபோல மாணவ மாணவிகள் கல்வி பயில கல்வி கடன் உறுதிச் சட்டத்தை அந்த காலகட்டத்தில் தான் உருவாக்கினோம். இச்சட்டத்தினால், ஏழை எளிய மாணவர்கள் கல்வி கடனை பெற்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வழிவகுத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 120 கோடி ரூபாய் வரை மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறப்பட்டதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே காலத்தில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அரசியல், அரசு சார்ந்த நடவடிக்கைகளை சட்டத்தின் அடிப்படையில முழு விவரங்களையும் கேட்டறிந்து கொள்ளுகிற உரிமையை இந்த சட்டம் சாதாரண மக்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சட்டம் பல அரசுத் துறை ரீதியான நடவடிக்கைகளை சீர் செய்துள்ளது. அரசு மற்றும் அரசியல் துறைகளில் நடைபெறும் பல ஊழல்கள் இந்த தகவல்அறியும் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சாமானிய மக்களும் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள பெரும் வாய்ப்னை இச்சட்டம் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல,” என்றார்.
.