January 16, 2017 தண்டோரா குழு
தமிழகத்திற்கு ரூ.1000 கோடி வறட்சி நிவாரண நிதியாக உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான முதலமைச்சரின் மனுவை னு தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலன், பிரதமர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.
முதலமைச்சரின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் . தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இந்தத் தொகையை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை மதிப்பிடவும் அக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள குடிநீர் ஏரிகளில் கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி 1.966 டிஎம்சி தண்ணீரே உள்ளது. நீர்நிலைகளில் தண்ணீரின் அளவும் மிகவும் குறைந்துவிட்டது. முக்கியமான 15 அணைகளில் 25.74 டிஎம்சி தண்ணீரே உள்ளது.
எனவே, தமிழகத்தின் வறட்சி பாதிப்புக்களைச் சரி செய்ய ரூ.39,565 கோடியை நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.”
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.