April 25, 2023
தண்டோரா குழு
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின மக்களுக்கான சட்ட சலுகைகளை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவ மக்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் தலைவர் அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் முதலமைச்சர் இத்தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் கூறியதாவது:
நம்முடைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இந்தியன் பெந்தெகொஸ்தே அசெம்பிளிஸ் மற்றும் பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தலித் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் பின்தங்கி இருந்த மக்களுக்கு இட ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரத்தில் தமிழக சட்டசபையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் கிறிஸ்தவ மக்களுக்கான கோரிக்கையை எழுப்பினார்.
அந்தக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றி இருக்கிறார். மேலும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்திருக்கிறார்கள். சமுதாயத்தில் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டதற்கு நன்றி. இவ்வாறு அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் கூறினார்.