April 29, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கடந்த மாதம் யானை ஒன்று மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் முறிந்து யானை மீது விழுந்தது. அப்போது, மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வனஅலுவலர், வருவாய் அலுவலர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, வனத்தையொட்டிய ஒரு கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் பாதைகள், பழுதடைந்த மின்கம்பங்கள் கண்டறிந்து சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் 29ம் தேதி முதல் வருவாய்துறை, வனத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை அலுவலர்கள் இணைந்து மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுக்க வனத்தையொட்டிய ஒரு கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரையில் இருந்த சாய்வான மின்கம்பங்கள், பழுதடைந்த கம்பங்கள், இழுமை கம்பி அமைத்தல், கான்கீரிட் மூலம் கம்பங்களை உறுதிப்படுத்துதல் என 1,936 கம்பங்களை கண்டறிந்து 1,542 கம்பங்களை சீரமைத்துள்ளனர்.
மீதமுள்ள பணிகளை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.