May 6, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும்
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டை முடிந்து 3வது ஆண்டை நோக்கி செல்கின்றோம்.மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முதலமைச்சர் அறவுறுத்தியுள்ளார்.மேலும் நெல்லினை உடனடியாக அரவைக்கு அனுப்பி அரிசியாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.அரவை ஆலைகளின் எண்ணிக்கை உயர்த்தி இருக்கின்றோம்.
கடந்த ஆட்சியாளர்கள் 18 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை அரைக்காமல் வைத்து சென்றனர் . மேலும் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்க இந்த அரசில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம். அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகின்றோம்.
ஆட்சிக்கு வந்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.2 வருடங்களில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.குடும்ப அட்டை தொலைந்து விட்டால்,ரூ 45 செலுத்தி அதன் நகலை பெற முடியும். தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட இருக்கின்றது.
கியூ ஆர் கோடு முறையில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் இனி வாங்கலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.கோவை மாவட்டத்தில் 536 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றது, அவற்றிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும்.234 தொகுதியிலும் சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.கோதுமையை பொறுத்த வரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டனர் .
இது தொடர்பாக மத்திய அரசுடன் மீட்டிங்கில் கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கின்றோம் . 15 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றது .நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருக்கிறது .கோவை,
நீலகிரி,கன்னியாகுமரி, தென்காசி மாவட்டஙகளில் முதல்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மண்எண்ணை ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கின்றது.
பருப்பு,பாமாயில்,சக்கரை போன்றவற்றை எவ்வளவு விலை கொடுத்தும் அரசால் வாங்கி
விட முடியும்.எதிர்கட்சி என்பதால் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது.கோதுமை, மண்ணெணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது , நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் இதை சொல்வோம் .நியாய விலை கடைகளில் பொருட்கள் தரமாக இருப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.ரேசன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும் , மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள் . இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் கார்த்திக் தொண்டாமுத்தூர் ரவி முன்னாள் எம்பி நாகராஜன் மற்றும் பலர் இருந்தனர்.