May 13, 2023 தண்டோரா குழு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.85 லட்சம் மோசடி செய்த ஏஜன்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம் விருதாச்சலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகர் பகுதியில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சியை அணுகி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது அந்த ஏஜென்சி நிர்வாகி ஜோஸ்வா (34) என்பவர், ‘‘கனடா உட்பட பல்வேறு நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். பணம் தந்தால் வெளிநாடு அனுப்பி பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வைத்து விடுவோம்’’ என கூறினார்.
இதைக்கேட்ட ரவிச்சந்திரன் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக 17.85 லட்ச ரூபாய் கொடுத்தார். பணத்தை வாங்கிய ஜோஸ்வா வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஜோஸ்வா மீது மேலும் சிலர் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் அளித்து வருகின்றனர். 20க்கும் மேற்பட்டவர்கள் இவர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக இவர் வேலை தருவதாக மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.