May 15, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த தெய்வாணையம்மாள்(74) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த 12ம் தேதி இரவு தெய்வாணையம்மாள் வீட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இது சம்மந்தமாக தெய்வாணையம்மாளின் உறவினர் மருதாச்சலம், மகன் நாகராஜன் ஆகியோர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன்விசாரணை மேற்கொண்டதில், சஞ்சய் பழனிசாமி(18),கௌதம்(19) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை செய்ததில் இம்மூவரும் பணம் மற்றும் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததையும், பின் மூதாட்டியின் 7½ பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.20,800 ஆகியவற்றை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் தெய்வாணையம்மாளின் மருமகளான பானுமதி (36) மற்றும். குற்றவாளிகளில் ஒருவரும், தெய்வணையம்மாளின் உறவினருமான சஞ்சய் பழனிசாமியின் தாயான ஈஸ்வரி (41) ஆகியோர் இதற்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளதும் தெரிய வந்தது.
எனவே ஆதாயத்திற்காக தெய்வானையம்மாளை திட்டம் போட்டு கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற குற்றத்திற்காக மேற்படி நபர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து, அவர்கள் திருடிச் சென்ற 7½ பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.20,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆதாய கொலை வழக்கில் கொலையாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த தனிப்படையினரை மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
வீட்டில் தனியாக இருக்கும் நபர்கள், குறிப்பாக பெண்கள் அருகிலுள்ள காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் அவசரம் எனில் தயங்காமல் உடனே காவல் துறையை அழைத்திட வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.