January 17, 2017 தண்டோரா குழு
“அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 21 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடியப் போராடியவர்களைக் கைது செய்தது கண்டனத்திற்குரியது. அவர்களை உடனே விடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்” என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளார் ஜி.வி. பிரகாஷ், பாடகர் அருண்ராஜா காமராஜ், இலட்சிய திமுக தலைவரும், நடிகர் இயக்குநருமான டி. ராஜேந்தர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.இவர்களுடன் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.க. ஸ்டாலின்:
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது, தமிழக இளைஞர்களின் உரிமைக்குரல் மீதும், தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும்.
தமிழுணர்வுடன் போராடியவர்களைப் பட்டினி போட, அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் அலங்காநல்லூர் மக்களைக் காவல் துறையினர் தடுக்க முற்பட்டனர். இது மனிதநேயமற்ற செயல். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அங்கு மக்களைச் சுற்றி வளைத்திருக்கும் காவல் துறையினரைத் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
ஜி.வி. பிரகாஷ், அருண்ராஜா காமராஜ்:
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் பாடகர் அருண்ராஜா காமராஜ் செவ்வாய்க்கிழமை போராட்டம் மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், “பாரம்பரியமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும் ” என்று வலியுறுத்தினர்.
டி. ராஜேந்தர், மயில்சாமி:
“அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என கோரி சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி. ராஜேந்தர் மற்றும் நடிகர் மயில்சாமி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
முகமது கைஃப்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆதரவு என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால், தமிழகத்தைச் சேராத கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது டுவிட்டரில் செவ்வாய்க்கிழமை, “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழ்ச் சகோதரர்கள் நடத்திவரும் போராட்டத்தின் தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு வியப்பளிக்கிறது. ஒரு காரணத்துக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புணர்வுடன் போராடும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.