May 22, 2023 தண்டோரா குழு
கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள ஆதீசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ்முறைப்படி கோலகலமாக நடைபெற்றது.
கொங்குநாட்டில் 1000 ஆண்டுகள் காலம் தொன்மையுடைய இராசகேசரி பெருவழியை ஒட்டி அமைந்துள்ள குணியமுத்தூர் ஜே.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காளிமுத்து அடிகளார் சிவலிங்கத்தை வழங்கினார்.அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் கருவறை அர்த்த மண்டபத்துடன் அமைத்து ஆதீசுவரர் என அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் அர்த்த மண்டபம் புணரமைக்கப்பட்டு,ஆதீசுவர்ருக்கு புதிய திருமேனி செய்யப்பட்டு, விநாயகர், தென்முகப்பரமன்,அண்ணாமலையார்,பிரமா,கொற்றவை ஆகிய தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்டு, அருள்மிகு ஆதிசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ்முறைப்படி நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு,கடந்த மூன்று தினங்களாக முதல் கால யாக பூஜை துவங்கி, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மூன்று கால யாக பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பேரூர் பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை தலைவர் முனைவர் இலட்சுமிபதிராசு தலைமையில் திருக்குட நன்னீராட்டு வேள்வி பணி நடைபெற்றது. மேள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒத புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஆதீசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.