May 24, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரத்யேக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவர் புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வருவோர் தொழிலினை விரிவாக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியமாகவும், 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும். விண்ணப்பதாரர் திட்டத்தில் சொந்த முதலீட்டினை தவிர்க்கும் வகையில் தகுதியான மானியம் முன்முனை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நேரடி விவசாயம் தவிர்த்து அனைத்து வகையான உற்பத்தி, சேவை, மற்றும் வியாபாரம் சார்ந்த தகுதியான தொழில்கள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.
புதிய தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். கல்வி தகுதி தேவையில்லை. தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவின் மூலம் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் – 641001 என்ற முகவரியை நேரடியாகவோ அல்லது 0422-2391678, 2397311 என்ற எண்ணிலோ அணுகலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.