May 29, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 7ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருகை புரிவோருக்கு இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பித்திட வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750 உதவித்தொகை, புதுமை பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ.1000, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் போன்றவைகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.