June 3, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலைகள்,மாநில நெடுஞ்சாலை சாலைகள்,மாநாகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.
விளம்பர பலகைகளை ஊராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிமுறைகளின்படி மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெறப்பட வேண்டும். மேலும் விளம்பர பலகைகளை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும், காவல்துறையினர் பரிந்துரையின் படியும் அனுமதி பெறப்பட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அகற்றுவதற்கு தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தெக்கலூர் – நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற காவல் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சூலூர் வட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமின்றி விளம்பர பலகை அமைக்கும் போது இரும்பு கம்பம் சரிந்து விழுந்து கடந்த 1ம் தேதி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.