June 11, 2023 தண்டோரா குழு
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாய் சார்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார். அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார். இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, பிளக் மற்றும் டைனமோ உதவியுடன் சார்ஜ் செய்ய முடியும்.
வழக்கமான சைக்கிள் ஆகவும், தேவைப்பட்டால் இ பைக்காகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். போலீஸ் பேட்ரோல், நகர்புறத்தில் பயணம் உள்ளிட்டவைகளுக்கு இவை பயன்படும் என தெரிகின்றன. தற்போது முதல் சைக்கிளை வடிவமைத்து இருக்கும் இவர், இன்னும் 10 சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றார். இதேபோன்று இ ஆட்டோ தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
ஏரோநாட்டிக்கல் படித்த பொறியியல் பட்டதாரியான இவர், ஏதோ ஒரு சூழலில் கொலை குற்றத்துக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவிக்கும் நிலையில், கற்ற கல்வியை புத்தி கூர்மையுடன் பயன்படுத்தி இதுபோன்று இ பைக், இ ஆட்டோ தயாரிக்கின்ற பணியில் மும்முறமாக ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கின்றன.