June 13, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி தெரிவித்துள்ளதாவது:
இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவிக்க ஒன்றிய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கென தேசிய நிலையான வேளாண்மைத் திட்டத்தின் கீழ் மண் சுகாதார மேலாண்மை திட்டம் துணை அங்கமாக தொடங்கப்பட்டது. நீண்ட கால மண் வளப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாரம்பரிய நிலையான மாதிரிகளை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023-24-ம் ஆண்டில் கோவை மாவட்டத்திற்கு 400 எக்டர் 20 தொகுப்புகள் என்ற அளவில் இலக்கு பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 50 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வேளாண் முறையை மேற்கொண்டு 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்குகின்றனர். இந்த பாரம்பரிய வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் புதிதாக இயற்கை விவசாயம் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ. 50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்கு தேவையான உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் மண்புழு உரம் போன்றவற்றை வாங்குவதற்க்காக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த பாரம்பரிய வேளாண் திட்டமானது இந்த வருடம் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.