June 14, 2023 தண்டோரா குழு
கோவை குமரகுரு கல்லூரியில் 59ஆவது வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு நடைபெற உள்ளது.
வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கம் நிலப்பரப்பு,கடல் மற்றும் கடலோர நிலப்பரப்புகளில் உள்ள சிக்கல்களை கண்டறிதல்.காடுகள்,விவசாயம்,காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார அணுகுமுறைகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இச்சங்கத்தின் 59 வது வருடாந்திர சந்திப்பு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வருகிற ஜூலை 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனை இயற்கை சூழலிகளுக்கான இந்திய பிராந்திய சங்கம் குமரகுரு நிறுவனங்கள் ஒருங்கிணைக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய வனவிலங்கு நிறுவனம்,சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஓசை பாதுகாப்பு மற்றும் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோரும் இணைந்து ஒருங்கிணைக்க உள்ளனர்.
இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு இந்தியாவில் இரண்டாவது முறையாக, “அறிவியலின் சமநிலை தன்மை, பாதுகாப்பு மற்றும் சமூகம்” எனும் கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தொழில் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.
அந்நிகழ்வில் இயற்கை சார்ந்த செயல்களுக்கு முன்னுரிமை வழங்குதல், நீலகிரி உயிர்க்கோள காப்பக சுற்றுப்புறம், வெப்ப மண்டல சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியமான இடங்கள் மற்றும் உலகளாவிய காலநிலை தன்மை பராமரிப்பு பற்றிய கருத்தரங்கம் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளதாகவும் இது போன்ற பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் கொள்கை உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் ஆகியவை தற்காலிக நிகழ்வுகளுக்கும் எதிர்கால தீர்வுகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர்.