June 20, 2023 தண்டோரா குழு
மருத்துவம் தொடர்பான கல்வி பயில இந்திய மாணவர்களுக்கென ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய நாட்டு கல்வி அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா நாட்டில் சென்று இந்திய மாணவர்கள் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இது தொடர்பான கூடுதல் தகவல்களை மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவையில்,ரஷ்ய கல்வி கண்காட்சி வரும் 23 ந்தேதி நடைபெற உள்ளது.சுமார் பத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய பல்கலைகழகங்கள் இந்த கல்வி கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கண்காட்சி நடைபெற உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில்,அயல்நாட்டு மாணவர் சேர்க்கை பிரிவின் மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் ரஷ்ய நாட்டு பல்கலைகழக பேராசிரியை சாரா பல்சேவா எலினா,மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரி சிலோவா எக்கத்திரினா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
ரஷிய பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டில் மருத்துவம் பார்ப்பதற்கு, அவர்கள் பெறும் பட்டங்களுக்கு மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் கட்டாயமாக இருப்பதால், வெளிநாடுகளில் வழங்கப்படும் மருத்துவப்பட்டம், இந்தியாவில் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும் உரிமம் பெற தகுதியுடையதாக இருக்கும் வகையில், அனைத்து விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருவதாக தெரிவித்தனர்.
எனவே, இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்.படிப்பதற்கு ரஷியாவை முதன்மையாக தேர்வு செய்யலாம் எனவும்,. இதற்காக 5 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு ரஷிய கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் ரஷியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், இது குறித்து கூடுதல் தகவல்களை வழங்கும் வகையில்,ரஷ்ய பல்கலைகழகங்கள் பங்கேற்கும் கண்காட்சி வரும் 23-ந் தேதி கோவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.