June 26, 2023 தண்டோரா குழு
கோவை ஶ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை அரங்கத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கும் உதவிடும் விதமாக மிராக்கில் என்ற திட்டத்தின் துவக்க விழா எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி தலைமையில் நடந்தது.
இந்த விழாவில் இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மருத்துவர் குகன் வரவேற்புரையாற்றினார்.இந்த துவக்க விழாவில் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் திரட்டிய நிதியுடன் சர்வதேச ரோட்டரி அமைப்பின் நிதி உதவியையும் பெற்று மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 பேருக்கும்,கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கள் என மொத்தம் 80 நோயாளிகள் மருத்துவ உதவி பெறும் வகையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி முன்னிலையில் இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் அவர்களிடம் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் அபர்ணா சுக்கு மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரியன் சுபாஷ் கோயங்கா ஆகியோர் ரூ.68 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.
இது குறித்து மருத்துவர் குகன் பேசுகையில்:-
இன்று நமது நாட்டில் மார்பக புற்றுநோய் என்பது நகர் புறங்களிலும்,கர்பப்பை வாய் புற்று நோய் என்பது கிராம புறங்களிலும் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது உள்ள மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்துக்கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என கூறினார்.
ரோட்டரி மற்றும் இராமகிருஷ்ண மருத்துவமனை இணைந்து மிராக்கில் என்ற திட்டத்தை இன்று துவக்கி உள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 89 புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறுவர்கள் என மருத்துவர் குகன் கூறினார்.