June 30, 2023 தண்டோரா குழு
கோவையில் கூட்டுறவு துறை மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 2 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. அன்றாட சமையலுக்கு தக்காளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தக்காளி இன்றி சமையல் செய்ய முடியாத நிலையும் உள்ளது. தக்காளி விலை உயர்வால் ஹோட்டல், தள்ளு வண்டி கடைகள், வீடுகள் என அனைத்து தரப்பு மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டனர்.
கோவையில் மட்டும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்களும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளும் மிகவும் பாதிக்கப்பட்டன. வீடுகளில் சாம்பார் உள்ளிட்ட உணவு வகைகளை சமைக்கும் போதும், சட்னி போன்றவைகள் சமைக்கும் போதும் தக்காளி மிகவும் குறைவாக பயன்படுத்தி சமைக்கும் நிலை இருந்து வந்தது. பல ஹோட்டல்கள், உணவு கடைகளில் தக்காளி சட்னி கட் செய்யப்பட்டது. சிலர் மளிகைக்கடைகளில் தக்காளிகளை 3,4 அல்லது 5 என எண்ணி பார்த்து வாங்கி சென்றனர்.
இதே நிலை நீடித்தால் நிலைமை மிகவும் மோசமாக போய்விடும் என்பதால் தமிழக அரசு சார்பில் கூட்டுறவு துறை மூலம் தக்காளியை கொள்முதல் விலைக்கே அல்லது ரூ.60க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கூட்டுறவு மூலம் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி செய்ய முடிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி சிந்தாமணி, வடகோவை, சாய்பாபா காலனி, ஆர் எஸ் புரம், பெரியநாயக்கன் புதூர் கூட்டுறவு பண்டகசாலை, பெரியநாயக்கன்பாளையம் காய்கறி கூட்டுறவு விற்பனைச் சங்கம், கோவை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பூ மார்க்கெட், ஆவின், தெலுங்குபாளையம், சங்கனூர் கூட்டுறவு பண்டகசாலை, ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய 10 இடங்களில் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதனை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவையில் 10 இடங்களில் கூட்டுறவு துறை மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 1 கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரே நாளில் மக்கள் 2 ஆயிரம் கிலோ வரை தக்காளியை வாங்கி செல்கின்றனர். கூட்டுறவு துறை மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுவதால் தக்காளிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் தக்காளி விலை குறைய தொடங்கும்,’’ என்றார்.