July 7, 2023 தண்டோரா குழு
கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ரைஸ் ஆப் இந்தியா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை நான் இன்னமும் படிக்கவில்லை. படித்த பிறகு பேசினால் தான் சரியா இருக்கும்.
தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. அறப்போர் இயக்கத்திற்கு பாரதிய ஜனதா கட்சி முழுமையாக ஆதரவளிக்கிறோம். இதுவரை பாரதிய ஜனதா கொடுத்துள்ள ஊழல் புகார்கள் தொடர்பாக ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும்.
திமுக நிர்வாகி ஆர்.எஸ் பாரதி பேச்சுக்கும், வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கிறது. பேசுகின்ற பேச்சில் ஒரு தரம் வேண்டும். திமுக தொண்டர்கள் அண்ணாமலையை பிரியாணி போட்டுவிடுவார்கள் என்கிறார். இதெல்லாம் அருவா புடிச்ச கை. தோட்டத்தில் அருவா புடிச்சு மரத்தை வெட்டும் கை. அருவா யார் பிடிச்சாலும் வெட்டத்தானே செய்யும். நல்லாவே வெட்டும். ஆர்.எஸ்.பாரதி ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்னதான் தலைகீழா நின்னு தோப்புக்காரனும் போட்டாலும் 2024ல் பிரதமர் மோடி 400 எம்பிக்களை பெற்று ஆட்சிக்கு மூன்றாவது முறையாக தொடர்ந்து வருவது உறுதி.
தமிழகத்தில் மக்களுடைய நம்பிக்கையை பாரத ஜனதா கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெற்றுள்ளன. 39க்கு39 நாம் வருவதும் உறுதி. விழுப்புரம் கல்யாணம் நிகழ்ச்சி என்பது எங்களது கட்சியை சேர்ந்தவர் ஏற்பாடு செய்தது. அவருடைய தந்தை மாற்றுக்கட்சியில் உள்ளார். மக்கள் முடிவு செய்யட்டும். தமிழகத்தினுடைய அரசியல் எப்படி போகுது யார் யாரை போட்டு எடுத்திருக்காங்க என மக்கள் முடிவு செய்யட்டும். பாஜகவும், அண்ணாமலையும் நாங்கள் யாரையும் போட்டியாக எடுக்கவில்லை. ஆரோக்கியமாக அரசியல் செய்ய வேண்டி தான் நாங்கள் வந்திருக்கிறோம். எத்தனயோ மாற்று கட்சி நண்பர்களுடைய விசேஷத்துக்கு போகிறோம், வீட்டில் சாப்பிடுகிறோம், ஏர்போர்ட்டில் பேசுகிறேன். அதற்காக இப்படியே சஸ்பெண்ட் செய்துவிட்டு போனால் எப்படி?.
தமிழகம் எலக்ட்ரானிக் பொருட்கள் எக்ஸ்போர்ட்டில் முதலிடம் பெற்றிருக்க காரணம் இந்திய அரசின் பொருளாதார கொள்கைதானே தவிர தமிழக அரசின் பொருளாதார கொள்கை காரணம் அல்ல. முதல்வர் ஸ்டாலின் இதற்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்.பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சாமியை நான் பார்க்கவில்லை. இனி போய் பார்க்க போவதும் இல்லை. அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் தான் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்றால் அப்படி அது எனக்கு தேவையில்லை.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுவார் என நம்புகிறேன். அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை உள்ளது.
பாரதிய ஜனதாவில் நான் ஒரு தொண்டன் தான். தகுதியான நபர்கள் நிறைய பேர் என்னை விட பெட்டராக இருக்கிறார்கள். என்னைவிட சிறந்தவர்கள் இருக்காங்க. சிறந்த தலைவர்கள் இருக்காங்க. என்னுடைய வேலை ஒருங்கிணைத்தல் மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே தான் நான் அரசியலுக்கு வந்தேன். பவர் பாலிடிக்ஸ் பண்ணனும், டெல்லியில் போய் உட்காரனும், அமைச்சராகனும் என ஒரு சதவீதம் கூட நினைக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு தொண்டனாகவே தொடருவேன்.
திமுகவின் இரண்டாவது கட்ட ஊழல் பட்டியலை வேகமாக வெளியிடுவோம். பாஜக வளரணும் 39 இடத்தில் ஜெயிக்கணும். கூட்டணியோடு தான் இருக்கிறோம். கூட்டணி கட்சிகளுடன் பயணம் செய்கிறோம், எந்த பிரச்சனையும் இல்லை.பருவமழை குறைந்துள்ள நிலையில், காவிரி தண்ணீரும் வரவில்லை என்றால் என்னாவது. தமிழக அரசுதான் காவிரியை கொண்டுவரனும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடகம் ஆடுகிறார்கள்.
வானதி சீனிவாசன் அக்கா மீது தனிப்பட்ட முறையில் வன்மத்தை கக்குகின்றனர். திமுகவுக்கு தெரிந்தது ஆபாசமா பேசறது, பெண்களை ஆபாசமாக பேசுவது. இதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.