July 10, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டம் 751 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இதில், காலையில் மாணவர்களுக்கு கிச்சடி, உப்புமா உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன.
அரசின் இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 612 பள்ளிகள் மற்றும் நகர்புறங்களில் 139 பள்ளிகள் என மொத்தம் 751 பள்ளிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மொத்தம் 44 ஆயிரத்து 99 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இத்திட்டம் அடுத்த மாதம் முதல் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சமையல் அறைகள், மின் வசதி, குடிநீர் வசதி, உணவு திட்டத்திற்கு தேவையான தானியங்கள் இருப்பு வைத்தல், அதற்கான அலமாரி, பழங்கள், காய்கறி, பாத்திரங்கள், தட்டு, டம்ளர் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விநியோக்க வேண்டும் எனவும், கோதுமை, ரவை, சோளம், சேமியா, மளிகை பொருட்கள் போன்றவற்றை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிற்றுண்டி தயாரிக்க மகளிர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.