January 18, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் கொண்டு வர அலங்காநல்லூர் கிராம மக்கள் மாலை 6 மணி வரை மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்துள்ளனர்.
தமிழக மக்களின் பாரம்பரியப் பெருமை மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இது தொடர்பான போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரியும் மதுரை அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாகப் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலங்காநல்லூரைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்திலும், கோவையில் வ.உ.சி. மைதானத்திலும் சென்னையில் மெரீனா கடற்கரையிலும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தவிர பல்வேறு மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுப் போராடி வருகின்றனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் நடைபெற்ற கிராமப் பொதுக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவசரச் சட்டத்தை இயற்றுவதற்கு புதன்கிழமை மாலை வரையில் கெடு விதித்து அந்த கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.