July 13, 2023 தண்டோரா குழு
கோவை பச்சாபாளையம் ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. பொது மேலாளர் பாலபூபதி வரவேற்றார். இதில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை 124 பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:
நான் இந்த துறை அமைச்சராக பொறுப்பேற்று ஒன்றரை மாதம் ஆகிறது. இந்த குறைந்த காலத்தில் பல்வேறு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியில் நாட்டின் உற்பத்தி, பால் விவசாயிகள் வளர்ச்சி உள்ளது. தற்போது பால் பயன்படுத்தி பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்திய அளவில் பால் பொருட்கள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், பால் உற்பத்தி சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இதற்கு நகரமயமாக்கல் ஒரு காரணம். தவிர, மேய்ச்சல் நிலம் குறைந்துள்ளது.எனவே, பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கூட்டுறவு சங்கம் பொறுப்பாளர், உறுப்பினர்களை சந்தித்து அரசின் திட்டங்கள் எப்படி கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசித்து பேசி வருகிறோம். தவிர நிறைய வங்கி கடன் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த அரசு 2 லட்சம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு கொடுக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கும். கொள்முதல் உயர்த்த முடியும். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். நம் துணை கண்டம் முழுவதும் உள்ள முக்கிய கோரிக்கை என்பது விவசாயிகளின் உற்பத்திக்கு
குறைந்த பட்சம் விலை வேண்டும் என இருக்கிறது.
இந்நிலையில், ஆவின் நிறுவனம் பாலுக்கு நிரந்தரமான விலை நிர்ணயம் செய்து உள்ளோம். மேலும், தனியார் பால் வரும் என்பதை நம்ப வேண்டாம். விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கிடைக்க “ஸ்பார்ட் அக்ணாலிஜிமென்ட்” என்ற முறையை மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக நடைமுறை படுத்தி உள்ளோம். அதன்படி, விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பால் தரம் உடனடியாக பார்த்து அதற்கேற்ப விலை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுரையில் லிட்டருக்கு ரூ.33 வரை விலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இதற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
காப்பீட்டு திட்டத்தில் அனைத்து மாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50 மாடுகள் வைத்து இருப்பவர்களுக்கு முழுமையாக கடன் வசதி செய்து கொடுக்க முடியும். ஆவின் நிறுவன வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களிடம் பேச உள்ளோம். மேலும், நிர்வாக நிலையில் முற்போக்கான மாற்றம் கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளுக்கு லாபத்தில் ஒரு பங்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனம் பால்களில் தரம் இல்லை. அதில் கலப்படம் கண்டறிய முடிகிறது. ஆனால் ஆவின் பால் நூறு சதவீதம் பாதுகாப்பானது. இதில் எவ்வித கலப்படமும், கெமிக்கல்கள் இல்லை. முறையாக தயாரிக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் விட விலை குறைவாக உள்ளது. விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வைத்துள்ள கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவையால் பெட்ரோல், டீசல் மற்றும் தீவன பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்ந்து உள்ளது. இருப்பினும், விவசாயிகளின் பால் கொள்முதல் விலை கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தீவன பயிர்கள் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 64 சொசைட்டி ஒரு மாதத்தில் உருவாக்கி உள்ளோம். 18 முடிந்த சொசைட்டியை மீட்டுள்ளோம். மொத்தம் 104 சொசைட்டி கொண்டு வந்து உள்ளோம். ஆவின் செலவு குறைத்து வருகிறோம். நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக 6 சதவீதம் மின் கட்டணம் குறைந்து உள்ளது. விவசாயிகள் கோரிக்கைகளை ஒன்று ஒன்றாக நிறைவேற்றப்படும். கோவை பால் உற்பத்தி 1.50 லட்சம் என உள்ளது .
இது மிகவும் குறைவு. 3 லட்சம் உயர்த்த வேண்டும். தனியார் பாலுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆவின் அலுவலர்களுக்கு இலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர் எல்லோரையும் ஒன்றிணைந்து செல்லும் அரசு தான் திராவிட மாடல் அரசு. அதன்படி, பால் உற்பத்தி, சொசைட்டி, பணியாளர் என அனைவரும் பயன் பெற வேண்டும் என கான்ட்ராக்டர் பணியாளர்கள் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்க ஆராய்ந்து வருகிறோம். அனைவரும் ஒன்றிணைந்து பொதுத்துறை நிறுவனம் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.