July 18, 2023 தண்டோரா குழு
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து சந்தித்த்து வாழ்த்து பெற்றனர்
உலக யூத் கேம்ஸ் பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023′ போட்டி நேபாலில் உள்ள ரங்கசலா சர்வதேச ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மொத்தம் 200 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து ரௌத்ரா அகாடமியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 12, 14, 16 , 17 , வயது மற்றும் 21 வயது க்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில் ஒற்றைகம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு , மான் கொம்பு, வேல்கம்பு, சுருள் வாள் மற்றும் தொடுமுறை போட்டிகள் நடைபெற்றது.
பெண்கள் பிரிவின் ஒற்றை கம்பு வீச்சு முறையில், 12 வயதிற்கு உட்பட்ட கோவை ரௌத்திரா அகாடெமியை சேர்ந்த மாணவி அக்ஷிதா ஸ்ரீ தங்கம் வென்றார். 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மாணவி நேஹா மற்றும் சஷ்டி பிரியா ஆகியோர் தங்கமும், மாணவி லட்சுமி வெண்கலப் பதக்கமும் வென்றனர். 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி ஸ்ரீ முகிலா தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவின் ஒற்றை கம்பு வீச்சு முறையில், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜோகித் ஹர்சா வெண்கலப் பதக்கம் வென்றார்.
14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மதன்குமார் தங்கப்பதக்கமும், மாணவர் பிரிதிவிக் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மாணவர் தனேஸ்வர் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றார். மேலும், 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான யோகா போட்டியில் மகாலட்சுமி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். பதக்கங்களை வென்று கோவை திரும்பிய பயிற்சியாளர்கள் வெங்கடேஷ், வினோத் குமார், சூரிய நாராயணன், பாண்டீஸ்வரி, ராஜேஷ்வரி , ஸ்ரீ ஹரிஷ், மஹலஷ்மி மற்றும் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் பொதுமக்கள் ஆகியோர் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.