July 21, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 21ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள 3069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் ஜனவரி 5ம் தேதியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 14,98,721 ஆண்கள் 15,51,421 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினம் 558 என மொத்தம் 30,50,700 வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி எதிர்வரும் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் வரும் 21 (இன்று) முதல் அடுத்த மாதம் 21ம் தேதி வரையிலான காலத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது. இப்பணியினை புதிய செயலி மூலமாக பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களை முழுமையாக சரிபார்த்திடவும், திருத்தங்கள் இருப்பின் மாற்றம் செய்திடவும் புதிய செயலில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிதாக வக்காளர்களின் விவரங்களை புதிய செயலி மூலமாக விண்ணப்பம் செய்திடவும், இணைவழி விண்ணப்பங்கள் மற்றும் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கள சரிபார்ப்பு செய்து, அங்கீகரிக்கவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் ஆகிவற்றை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் முடித்திடும் பொருட்டு பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் வீட்டிற்குக் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.