January 19, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் 4-வது நாளாக வியாழக்கிழமை மாணவர்களுடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலகப்புகழ் பெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர். உச்ச நீதிமன்றத் தடையால் மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிச்சயம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அலங்காநல்லூர் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என ஏராளமானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கைதாகி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால்,அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் அலங்காநல்லூர் போராட்டக் களத்திற்கே சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறும்போது, “வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதுவரை வீட்டிற்குச் செல்ல மாட்டோம். தொடர்ந்து இங்கேயே இருப்போம். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்“ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டக் களத்தில் இருப்பவர்களுக்குத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள் உணவு வழங்கி வருகின்றன. அலங்காநல்லூரில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.