July 27, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறிந்து மழைநீரை அகற்ற தேவையான அளவில் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், கழிவுகளை தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து மற்றும் அடைப்புகளை சரி செய்யும் சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது.
இந்த வாகனம் அதிக நீரேற்று திறன் கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85 ஆயிரம் லிட்டர் உறிஞ்சும் திறன் கொண்டது. இவ்வாகனம் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும் அமைப்பினை கொண்டுள்ளது. மழைக்காலத்தில் சாலைகள்,சந்திப்புகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை நீர் தேங்கும் இடங்களில் உடனடி தேவைக்காக மழைநீரை அகற்ற சூப்பர் சக்கர் வாகனம் மற்றும் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.