July 28, 2023 தண்டோரா குழு
கோவையில் ஓட்டல்,நகைக்கடையில் பணிக்கு அமர்த்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டு 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஓட்டல்கள், மளிகை கடைகள், வணிக நிறுவனங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்நிலையில்,கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் கடைவீதி செட்டி தெருவில் உள்ள நகைக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் நேற்று குறிப்பிட்ட ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.இதனையடுத்து அதிகாரிகள் ஓட்டலில் பணி செய்த 3 சிறுவர்களையும், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களையும் மீட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன்,ஓட்டல் மேலாளர் முகமது ஹரீஸ் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.