July 29, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பில் குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் ரூ.442 கோடி மதிப்பில் 435 கிலோ மீட்டர் அளவில் பாதாள சாக்கடை திட்டப்பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளும், ஐந்து மண்டலங்களும் உள்ளன.சுமார் 6,500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு முன்னர் கோவை மாநகராட்சியில் 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. கோவை மாநகராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி இணைக்கப்பட்டன.
அப்போது,முன்பு இருந்த 72 வார்டுகள் 60 வார்டுகளாகவும்,புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் 40 வார்டுகளாகவும் ஒருங்கிணைக்கப்பட்டு 100 வார்டுகளாக உயர்த்தப்பட்டது.அதன்பின், மாநகராட்சியில் முன்பே இருந்த 60 வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்வு புனரமைப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2009-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கப்பட்டு 99 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட இணைப்புப் பகுதிகளில் கழிவுநீர் சீரான முறையில் வெளியேற்றிட பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவேற்றிட முடிவு செய்யப்பட்டது.அதன்படி இணைப்பு பகுதி 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டப்பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவை மாநகராட்சியின் குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் 87 முதல் 100 வார்டுகள் பகுதியில் ரூ.442 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் 435 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்துக்காக 30 இடங்களில் கழிவுநீர் உந்தேற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தின் ஒரு பகுதியில் ரூ.50 கோடி மதிப்பில் தினமும் 30 எம்எல்டி அளவுக்கு நீரை சுத்திகரிப்பு செய்யும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 69,658 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டது. இதில் தற்போது வரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.