August 14, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கம் (கொசினா) சார்பில் அதன் தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் சேகர் வெளியிட்ட அறிக்கையில்,”
கடந்த 2021 ம் ஆண்டு கொசினா நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் நிர்வாகிகள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தல் செல்லாது என கோவை மாவட்ட பத்திர பதிவு துறையில் புகார் தரப்பட்டது. கோவை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
சங்கப் பெயரை பயன்படுத்தி எந்த செயல்பாடும் செய்யக்கூடாது, விழாக்கள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. சங்கத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
இதற்கிடையே கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கம் பெயரை பயன்படுத்தி சிலர் கோவையில் முப்பெரும் விழா விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்க முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை ஆர் எஸ் புரம் கலையரங்கத்தில் வரும் 16ம் தேதி விழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சங்கம் தொடர்பான செயல்பாடுகளுக்கு கோர்ட்டு தடை விதித்த நிலையில் தடையை மீறி சிலர் விழா நடத்த ஏற்பாடு செய்திருப்பது சங்க உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழா நடத்த அனுமதிக்க கூடாது என சங்க நிர்வாகத்தின் சார்பில் பத்திரப்பதிவு கோவை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.