January 19, 2017 தண்டோரா குழு
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (ஜனவரி 19) கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
ஒபாமா இந்திய பிரதமரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரு நாடுகளுக்கிடையே அணு மின்சக்தி, பாதுகாப்பு, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நல்லுறவுஆகியவற்றை மேம்படுத்த உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.
2௦15ம் ஆண்டு இந்திய குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதை ஒபாமா நினைவு கூர்ந்தார். 68வது இந்திய குடியரசு விழாவிற்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்தார். பொருளாதார மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள், அமெரிக்க நாட்டிற்கு பாதுகாப்பு பங்காளியாக இந்திய இருந்தது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்கள் குறித்து இருவரும் பேசினர்.
இவ்வாறு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக 2௦14ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றபோது முதலில் வாழ்த்து தெரிவித்தவர் அமெரிக்க அதிபர் ஒபாமா. பிரதமர் மோடி அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். 2௦14ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் வெள்ளை மாளிகையின் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் இருவரும் எட்டு முறை சந்தித்தனர்.
தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகார உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், “அவர்கள் இருவரிடையே நல்ல தோழமையும், ஒருவர் மேல் ஒருவர் அதிக மரியாதையும் உண்டு. பிரதமர் மோடி பதவியேற்றபோது அவரை வாழ்த்த தொடர்பு கொண்ட போது அவர்களுடைய உறவு தொடங்கவில்லை. மாறாக அவர்களுடைய உறவுக்கான விதை பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது” என்றார்.