August 17, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஜாப் ஆர்டர்களை நம்பி தான் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆட்டோ மொபைல், டெக்ஸ்டைல், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் இருந்து ஜாப் ஆர்டர்கள் பெறப்படுகின்றன.
ஜி.எஸ்.டி., ஊரடங்கு, பொருளாதார மந்தநிலை, மூலப்பொருள்கள் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிக்கி தவித்த குறுந்தொழில் நிறுவனங்கள், தற்போது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே 12 கிலோ வாட்டுக்கும் கீழே மின் இணைப்பு பெற தகுதியான குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எல்.டி. 3ஏ-1 பிரிவில் மின் இணைப்பு பெறலாம். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் எல்.டி. 3பி பிரிவில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மின் இணைப்புகளை வழங்கி வருகின்றனர். இதனால் கூடுதல் மின் கட்டணம், பிக் அவர் கட்டணங்கள் போன்றவைகளை குறுந்தொழில் முனைவோர்கள் செல்லுத்தி வருகின்றனர்.
தற்போது இதனை அறிந்து கொண்ட குறுந்தொழில் முனைவோர்கள், எல்.டி. 3ஏ-1 பிரிவில் மின் இணைப்பை மாற்றிக் கொடுக்க கோரி, கோவை மின்வாரியம் தலைமை பொறியாளருக்கு நேரடியாக சென்றும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலமும் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் நம்மிடம் கூறியதாவது:-
எல்.டி. 3பி பிரிவில் குறுந்தொழில் முனைவோர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65 பைசா ஆகும். ஆனால் எல்.டி. 3ஏ-1 பிரிவில் ரூ.4.65 பைசா தான். பிக் அவர் கட்டணம் இல்லை. இந்த சலுகை இருந்தும், அதற்கான தகுதியும் இருந்தும் குறுந்தொழில் முனைவோர்களை மின்வாரியம் இத்தனை நாட்களாக ஏமாற்றி வந்துள்ளது. இந்தியா அளவில் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவது தொடர்பாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மூடு விழா தான் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.