September 11, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
தினசரி காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு நான்கு பெட்டிகளுடன் மலை ரயில் இயக்க பட்டு வரும் நிலையில் இந்த ரயிலில் பயணித்து வன பகுதியில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் அனைவருக்கும் இந்த ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு என்பது கிடைக்காமல் இருப்பதால் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நடப்பு மாதம் 16,30 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாகவும் அதே போல் வரும் அக்டோபர் மாதம் 21,23 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மலை ரயில் உதகைக்கு 2.25 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு மலை ரயில் இயக்க திட்டமிட பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரயிலில் முதல் வகுப்பு இருக்கைகள் 40, இரண்டாம் வகுப்பு 140 மொத்தம் 180 இருக்கைகளில் பயணிகள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.