January 20, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரும் முயற்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார் என மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புது தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசினோம். அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார்.
இதனால் தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்கவும் மத்திய அமைச்சரிடம் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினோம்.
காங்கிரஸ் கட்சிதான் தமிழர்களுக்கு இன்னல்களைத் தந்தது. இவர்களுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் மக்களை ஏமாற்றியது. இவர்கள்தான் ஜல்லிக்கட்டுப் போட்டி தடைக்குக் காரணம்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு தடையுத்தரவு பிறப்பித்த பிறகு, தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.-வும் தடையை நீக்க முழு அக்கறை காட்டவில்லை” என்றார் தம்பிதுரை.