November 18, 2023 தண்டோரா குழு
ஜேகே டயர் வழங்கும் 26வது எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ருஹான் ஆல்வா, டார்க் டான் ரேசிங்கைச் சேர்ந்த ஆர்யா சிங் மற்றும் டிஜில் ராவ் ஆகியோர் எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் தலா ஒவ்வொரு போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
எல்ஜிபி பார்முலா 4 போட்டியைப் பொறுத்தவரை இதுபோன்று இதற்கு முன் இருந்ததில்லை. மூன்று பேருமே இறுதிப் போட்டியின் முதல் நாள் பந்தயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் களம் இறங்கினார்கள். இருப்பினும் அவர்கள் மூவருக்கும் இடையே சில புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே இது தங்களுக்கான சரியான தருணம் என்று மிகுந்த உற்சாகத்துடன் பந்தயத்தில் பங்கேற்றனர்.
முதல் நாளில் தொடக்கப் போட்டியில் டார்க் டான் ரேசிங்கின் டிஜில் ராவை கடுமையாக போராடி பின்னுக்கு தள்ளி பெங்களூரைச் சேர்ந்த ருஹான் வெற்றி பெற்றார். இது அவரது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது மற்றும் இரண்டாவது பந்தயத்திற்கு செல்லும் முன் அவரது புள்ளிகளை இது மேலும் உயர்த்தியது.
அவர் நான்கு சுற்றுகளுக்கு மேல் முன்னணியில் இருந்த நிலையில் ஆர்யாவும் டிஜிலும் அவரை முந்த முயற்சிப்பதைக் கண்டார்.இருப்பினும் கடுமையாக போராடி முதல் பந்தயத்தில் வெற்றி பெற்றார். மூன்று பந்தயங்களிலும் மூவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆர்யாவும் டிஜிலும் அவரை முந்தி சிறிது நேரம் முன்னால் சென்று கொண்டிருந்தாலும்,ருஹான் 11வது சுற்றில் முதல் மூலையில் புத்திசாலித்தனமாக முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார்.
இதேபோல் 2வது பந்தயத்தில் ஆர்யா சிங்கும், 3வது பந்தயத்தில் டிஜில் ராவும் முதலிடம் பிடித்தனர்.ஜேகே டயர் நோவிஸ் கோப்பை போட்டியும் எல்ஜிபி பார்முலா 4 போட்டியைப் போலவே விறுவிறுப்பாக இருந்தது. மொமெண்டம் மோட்டார்ஸ் போர்ட்டின் நெய்தன் மெக்பெர்சன் முதல் பந்தயத்தில் அணி வீரரும் சாம்பியன்ஷிப் தலைவருமான அர்ஜுன் எஸ்.நாயரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். ஆனால் 2வது பந்தயத்தில் கடுமையாக போராடி அர்ஜுன் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக 62 புள்ளிகளுடன் உள்ளார்.
ஜேகே டயர் வழங்கும் ஆர்இ கான்டினென்டல் ஜிடி கோப்பை பிரிவில் அனிஷ் ஷெட்டி இரண்டு பந்தயங்களில் முதலிடம் பிடித்துள்ளார்.