November 27, 2023 தண்டோரா குழு
கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர்
அளித்துள்ள மனுவில்,
மக்களை அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளால் நாடு முழுவதும் மதம் சாதி இனம் ரீதியான கலவரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவும் இதில் கல்வி வளாகங்கள் குறிவைக்கப்பட்டு ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகள் பலரும் பலியாவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதன் வெளிப்பாடு தான் கோவை அசோகபுரம் அரசு பள்ளியில் மாணவி மீது ஆசிரியர்களின் மத ரீதியான துன்புறுத்தல் நிகழ்த்தியது எனவும் அந்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும் மாணவர்களை குறி வைத்து போதைப் பொருட்கள் விற்பனை தற்பொழுது அதிகரித்து வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்கள் அதன் உற்பத்தியையும் இறக்குமதியையும் தடை செய்யாமல் கீழ்மட்ட விற்பனையாளர்களை கைது செய்து எந்த பலனும் இல்லை என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இவற்றையெல்லாம் தடுப்பதற்கு, கல்வி வளாகங்களில் மதம் மூடநம்பிக்கை சார்ந்த நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும், அசோகபுரம் பள்ளியில் மாணவியை மதரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாணவியின் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்ய வேண்டும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை பாரபட்சம் இன்றி கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பது குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் ஆராய்வதற்கு மாநில அளவில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைப்பதற்கு பரிந்துரைப்பதாக கேட்டுக் கொண்டுள்ளனர்.