December 26, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது. அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர்,டிப்பர் லாரிகள்,ஜேசிபி போன்றவற்றில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். ராயல் டி ஸ்லிப் , ஜல்லி, எம் சாண்ட் கிராவல் மண் எடுப்பது என அனைத்தும் இந்த அதிகார புரோக்கர்களின் கட்டுப்பாட்டில் போய்விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிப்பர் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் சார்பில் புகார் மனு தரப்பட்டது. இதில் அதிகார புரோக்கர்கள் பெயர்கள் மற்றும் அவர்கள் வாங்கும் லஞ்ச தொகை குறிப்பிட்டு பகிரங்கமாக புகார் மனு தரப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் அமலாகத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகள் மற்றும் கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மாவட்ட வாரியாக சில ஆட்களை நியமித்து மேலும் பெருமளவில் வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கல் குவாரி உரிமையாளர்கள்,டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் சார்பில் சிலர் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். சுல்தான் பேட்டை பல்லடம் செஞ்சேரிமலை கிணத்துக்கடவு மயிலேறி பாளையம் சூலூர் கருமத்தம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்க வரும் ரத்தினம் கரிகாலன் மற்றும் கோவிந்தராஜ் அவர்களே வருக வருக, ..! குவாரிகளை தேடி வாராங்க ..கோடி கோடியா குவிக்க போறாங்க..
வரலாறு காணாத வசூலு..
கொள்ளையடிக்கிறதுல நம்ம அண்ணங்க ரொம்ப தில்லு என ஏகவசனத்தில் ஏகப்பட்ட போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர்.
உங்களால் தொழிலில் இழந்து பரிதவிப்பில் திணறிக் கொண்டிருக்கும் டிப்பர் லாரி, குவாரி,ஜேசிபி உரிமையாளர்கள் என போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தினம், கரிகாலன், கோவிந்தராஜ் ஆகியோர்களின் போட்டோ அடங்கிய போஸ்டர்கள் கனிமத் தொழில் செய்வோர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவோடு இரவாக யாரோ வந்து போஸ்டர்களை ஒட்டி சென்று விட்டார்கள். கனிமத்துறையில் புரோக்கர்கள் மூலம் வசூல் வேட்டை நடக்கிறதா என விசாரணை நடத்தப்படும். மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத் துறையினர் புரோக்கர்களின் கமிஷன் வசூல் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
கனிமத் தொழிலில் புரோக்கர்களுக்கு போஸ்டர் அச்சடித்து ஒட்டியது யாரு என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது.