January 21, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள காய்கறிச் சந்தையில் சனிக்கிழமை (ஜனவரி 21) திடீரென்று குண்டு வெடித்தது. அதில் 15 பேர் உயிரிழந்தனர் 3௦ படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் குர்ரம் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு காய்கறிச் சந்தையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. காய்கறிகள் வைக்கும் இடத்தில் ஒரு பெட்டிக்குள் சக்தி வாய்ந்த குண்டுகளை தீவிரவாதிகள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் அங்கேயே உயிரிழந்தனர். 3௦ படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த 3௦ பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அப்பகுதியைப் பாதுகாப்புப் படை சூழ்ந்துள்ளது. இந்த பயங்கரவாதச் செயலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் பிடிபடுவர். இந்தத் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவுயிடுள்ளேன்.
இவ்வாறு பாதுகாப்பு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.